-->

2016-01-24

மனைவி அமைவதெல்லாம்…

ருவரது ஜாதகத்தில் 7-ம் வீடு மனைவியைக் குறிக்கும் இடம். சுக்கிரன் மனைவியைக் குறிக்கும் காரகர்; களத்திரகாரகர். 7-ம் இடமும், 7-ம் வீட்டோனும், சுக்கிரனும், லக்னாதிபதியும் ஒருவரது ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தால், அந்த ஜாதகருக்கு நல்ல மனைவி அமைவதுடன், மனைவியால் யோக பாக்கியங்களும் உண்டாகும். திருமண வாழ்க்கை வெற்றிபெறும். நல்ல அந்நியோன்யம் உண்டாகும். ஒருவரையொருவர் புரிந்துகொண்டு அன்போடு வாழும் நிலை அமையும்.
சூரியன், சந்திரன், லக்னம் இவை மூன்றில் எது பலம் மிக்கதோ அதற்கு 7-ம் இடம் வலுக்கவேண்டும். 7-ம் வீட்டோனும் வலுப் பெற வேண்டும். சுக்கிர பலம் சிறப்பாக இருக்கவேண்டும். பலம் என்பது குறிப்பிட்ட கிரகமானது ஆட்சி, மூலத்திரிகோணம், உச்சம், திரிகோணம், கேந்திரம் ஆகிய நிலைகளில் இருப்பது ஆகும். அதே போன்று சுபக் கிரகப் பார்வையைப் பெற்றிருப்பது, அஷ்டக வர்க்கத்தில் குறிப்பிட்ட கிரகத்துக்கு அதிக பரல்கள் இருப்பதுவும் பலம் சேர்க்கும்.
வளர்பிறை சந்திரன் 7-ல் அமர்ந்து, பாபக்கிரகங்களின் சேர்க்கையோ, பார்வையோ பெறாமல் இருந்தால் ஜாதகருக்கு நல்ல மனைவி அமைவாள். முகம் மலர்ச்சியுடன் இருக்கும். தெளிவான மனநிலையோடு இருப்பாள். மென்மையான சுபாவம் இருக்கும்.
சுப பலத்துடன், சுப ஆதிபத்தியத்துடன் குரு 7-ல் அமர்ந்தால் சத்களத்திர யோகம் உண்டாகும். தெய்வபக்தியும் ஆன்மிகத்தில் ஆழ்ந்த ஈடுபாடும் கொண்ட மனைவி வாய்ப்பாள். மனைவியால் செல்வம் சேரும்.
7-ல் புதன் சுப பலத்துடன் இருந்தால் நற்குணமுள்ள, பேச்சாற்றல் உள்ள மனைவி அமைவாள்.
களத்திரகாரகனான சுக்கிரன் யோக காரக கிரகத்தின் சாரம் பெற்று வலுத்திருந்தாலும் 1, 4, 10, 5, 9 ஆகிய இடங்களில் இருந்தாலும் உத்தம களத்திரம் அமையும்; நல்ல மனைவி வாய்ப்பாள்.
மேஷத்துக்கு சூரியனும், குருவும் யோக காரகர்கள். ரிஷபத்துக்கு சனி; மிதுனத்துக்கு புதனும் சுக்கிரனும்; கடகத்துக்கு செவ்வாய்; சிம்மத்துக்கு செவ்வாய்; கன்னிக்கு புதனும், சுக்கிரனும்; துலாத்துக்கு சனி; விருச்சிகத்துக்கு சூரியன்; தனுசுக்கு சூரியனும் செவ்வாயும்; மகரத்துக்கு புதனும் சுக்கிரனும்; கும்பத்துக்கு சுக்கிரனும் செவ்வாயும்; மீனத்துக்கு செவ்வாயும் குருவும் யோக காரகர்கள்.
7-ம் வீட்டோன் 9-ல் இருந்தால் மனைவியால் பாக்கியம் சேரும். பானை பிடித்தவள் பாக்கியசாலி; அதிர்ஷ்டம் மிகுந்தவள்.
லக்னாதிபதி, 7-ம் வீட்டோன், சுக்கிரன் ஆகியோர் வலுத்து, சுபகிரகங்கள் பார்த்தால் நற்குணமுள்ள மனைவி அமைவாள். மண வாழ்க்கை சிறப்பாக அமையும். கணவன்- மனைவிக்குள் கருத்து ஒற்றுமை அதிகமாகும்.
களத்திரகாரகன் சுக்கிரனுக்கு 9-ல் வளர்பிறை சந்திரன், குரு ஆகியோர் அமர்ந்தால் மனைவி தெய்வபக்தி மிகுந்தவளாக அமைவாள். தான, தர்மங்களில் ஈடுபடுவாள்.
பூமி காரகன் செவ்வாய்க்கு 4, 7, 10-ம் இடங்களில் சுக்கிரன் இருந்தால், மனைவி மூலம் சொத்துக்கள் சேரும்.
சுக்கிரனும் குருவும் ஒருவருக்கொருவர் கேந்திரமாகவோ (1,4,7,10), திரிகோணமாகவோ (1, 5, 9) இருந்தால், மனைவியால் செல்வமும், தங்கமும், வெள்ளியும், உயர் ரக ஆடைகளும் சேரும்.
லக்னாதிபதி, 7-ம் வீட்டோன், சுக்கிரன் ஆகியோர் லக்னத்துக்கு 6, 8, 12-ம் இடங்களில் இருக்கக்கூடாது.
லக்னாதிபதியும் (ஜாதகர்), 7-ம் வீட்டோனும் (மனைவி) 6/8 என்ற நிலையில் சஷ்டாஷ்டகமாக இருப்பது கூடாது.
வளர்பிறை சந்திரன், பாபிகளுடன் சேராத புதன், குரு, சுக்கிரன் ஆகியோர் சுபகிரகங்கள் ஆவார்கள். இவர்களது தொடர்பு லக்னத்துக்கும், 7-ம் வீட்டோனுக்கும், சுக்கிரனுக்கும் அமைவது விசேஷம். இதனால் நல்ல மனைவி அமைவதற்கும், மண வாழ்க்கை சிறப்பதற்கும் வாய்ப்பு உண்டாகும்.
சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியோர் பாபக்கிரகங்கள் ஆவார்கள். இவர்கள் 2, 4, 7, 8, 12-ம் இடங்களில் இருப்பது விசேஷம் ஆகாது. இதனால் மணவாழ்க்கை பாதிக்கும்.
செவ்வாய் 2, 4, 7, 8, 12-ம் இடங்களில் இருப்பது செவ்வாய் தோஷம் ஆகும். களத்திர தோஷம் என்றும் இதை அழைப்பார்கள். இந்த தோஷம் இருந்தால் மண வாழ்க்கை பாதிக்கும். சம தோஷமாக இருந்தாலும், செவ்வாய்க்கு நல்ல ஆதிபத்தியம் இருந்தாலும், செவ்வாய் சுபகிரகப் பார்வையைப் பெற்றிருந்தாலும், ஆணுக்கும் பெண்ணுக்கும் சம தோஷமாக இருந்தாலும் இதனால் பாதிப்பு வராது.
ஆண் ஜாதகத்தில் களத்திரகாரகனான சுக்கிரனுக்கு முன்னும் பின்னும் பாபக் கிரகங்கள் அமைந்து, பாப கர்த்தரி யோகத்தில் சுக்கிரன் இருப்பாரானால், மனைவியின் ஆயுளுக்குப் பங்கம் உண்டாகும்.
களத்திரகாரகன் களத்திர ஸ்தானமான 7-ல் இருப்பது களத்திர தோஷம் ஆகும். ‘காரகோ பாவ நாசாய’ என்ற விதிப்படி மண வாழ்க்கையைப் பாதிக்கும். சுக்கிரனின் ஆதிபத்தியத்தைப் பொறுத்துக் கெடுபலன்கள் உண்டாகும்.
செவ்வாயின் வீடுகளான மேஷம், விருச்சிக ராசிகளில் சுக்கிரன் இருப்பது விசேஷம் ஆகாது. அதுபோல் சனியின் ராசிகளான மகர, கும்பத்தில் சுக்கிரன் இருப்பதும் குறை ஆகும். காம வேட்கை அதிகமாகும். பிற பெண்கள் தொடர்பு ஏற்படும். சுக்கிரன் செவ்வாய், சனி ஆகியோரது வர்க்கம் ஏறியிருந்தாலும் இந்த நிலை உண்டாகும்.
களத்திரகாரகன் சுக்கிரனுக்குப் பாபக் கிரகங்களின் சம்பந்தம் ஏற்பட்டாலும் மனைவியைத் தவிர பிற பெண்கள் சகவாசம் ஏற்படும்.
ஜன்ம லக்னத்தில் ராகுவும், 7-ல் கேதுவும் அமைந்து, 7-ம் வீட்டோன் வலு குறைந்தாலும், லக்னத்தில் கேது,  7-ல் ராகு வலு குறைந்திருந்தாலும் 2-ல் கேது 8-ல் ராகு; 2-ல் ராகு, 8-ல் கேது வலு குறைந்து இருந்தாலும் மனைவியை விட்டுப் பிரிய வேண்டிவரும். சம தோஷம் இருந்தால் பாதிக்காது. சர்ப்பதோஷம் ஒருவருக்கு இருந்து மற்றவருக்கு இல்லாமல் போகுமானால் விவாகரத்து, மரணம் ஆகியவை ஏற்படும்.
மொத்தத்தில் ஒருவருக்கு நல்ல மனைவி அமைய, ஜாதகத்தில் லக்னாதிபதியும் (ஜாதகர்), 7-ம் வீட்டோனும் (மனைவியைக் குறிக்கும் வீட்டின் அதிபதி), 7-ம் வீடும் (மனைவியைக் குறிக்கும் வீடு), களத்திரகாரகனான சுக்கிரனும் அதிபலம் பெறவேண்டும்.

0 comments:

© 2015 Tamil Jothidam Tips. WP themonic converted by Bloggertheme9. Powered by Blogger.
TOP