ரிஷபம் ராசி : குரு பெயர்ச்சி 2019
ரிஷப ராசிக்கு இதுவரை 7ல் இருந்த குரு இனி 8ம் வீடான தனுசுவிற்கு செல்வதால் உண்டாகும் பலன்களை பார்ப்போம்.
அஷ்டம குரு நஷ்டத்தை கொடுப்பாரா என்ற ஐயம் அட்டம சனியால் படாத பாடு பட்டு வரும் ரிஷப ராசி அன்பர்களுக்கு இருப்பது புரிகிறது. முதலில் 8ம் பாவம் என்பது துர்ஸ்தானம் என்று மட்டுமே நமக்கு ஒரு பிம்பத்தை கட்டமைத்துள்ளார்கள்.ஒருவரின் வாழ்நாளை சொல்லும் பாவகத்தை ஒருவரின் மரணத்தை சொல்லும் பாவம் என எதிர்மாறாக கூறி மக்களை பயமுறுத்தி வைத்துள்ளார்கள்.
காலம் எப்படி உள்ளது பாருங்கள்..ரிஷபத்தின் ராஜ யோகாதிபதி என விதிக்கப்பட்ட சனி படுத்தி எடுக்கிறார்.ரிஷப நாதன் சுக்கிரனின் முதன்மை எதிரியாக கருதப்படும் குரு பகவான் நன்மை செய்வாரா என்கிற எதிர்பார்ப்பு ஏற்படுகிறது.
முன்பே கூறியது போல் சுய ஜாதகத்தில் நல்ல தசா புத்தியில் உள்ளவர்கள் அதிகம் கவலை கொள்ள தேவையில்லை.அஷ்டமத்து குரு வெளிநாடு ,வெளிமாநிலம் போன்ற தூர தேச பயணங்களுக்கு துணை புரிவார்.கல்வி,பணி தொடர்பாக தூர தேசம் செல்ல காத்திருப்பவர்களுக்கு இனி நல்ல சேதி வரும்.
மறைந்தாலும் ஆட்சி பெற்று அவர் 12ம் வீட்டை பார்ப்பதால் நல்ல உறக்கம்(அஷ்டம சனியில் தொலைத்தீர்களே அதே உறக்கம் தான்),சுப காரியங்களுக்கான செலவுகள் ஏற்படும்.
அடுத்து குருவின் நேரடி பார்வை 2ம் வீட்டில் படுவதால் இனி உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு கிடைக்கும். குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் சற்று குறையும்.குறிப்பிட்ட சில நிலைகளில் வருமானம் கிடைக்கும். அதை சேமித்து கொள்வது நன்மை பயக்கும்.
குருவின் 9ம் பார்வை நான்காம் வீட்டில் படுவதால் வீடு,வாகனம் போன்ற விஷயங்களில் இருந்து வந்த முட்டு கட்டை விலகும்.தாய் வழி நன்மைகள் உண்டாகும்.
அஷ்டம சனியை விட அஷ்டம குரு கொடியது அல்ல என்பது அனுபவ பூர்வ உண்மை.இருப்பினும் நல்ல காலம் முழுமையாக பிறப்பதற்கு நாட்கள் உள்ளன என்பதால் பொருளாதார விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தி உடலை பேண வேண்டும்.
பரிகாரம்:
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் வழிபாடு செய்வது நிச்சயம் சிக்கல்களில் இருந்து உங்களை விடுவிக்கும்.
பொருளாதாரம் மேம்பட மகாலட்சுமி தேவியை வழிபாடு செய்து கொள்ள வேண்டும்.
By
Ashwin Kumar
By TamiJothidamTips |  19:16
Learn Vedic Astrology Lessons Basics
0 comments: