-->

2019-09-21

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - மீன ராசி

மீனம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2019:

இத்தனை நாட்கள் 9ம் வீட்டில் இருந்து ராசியை பார்த்த குரு பகவான் இனி மீனத்திற்கு 10ம் வீடாகிய மற்றொரு ஆட்சி வீட்டிற்கு செல்கிறார்.

இது சற்று வித்தியாசமான அமைப்பு.கோச்சார ரீதியாக ராசிநாதன் ஆட்சி அடைந்தார் என்பது வலு.அவர் ராசியை பார்க்காமல் போவது சற்று வலு குறைவு என்றாலும் சனி பெயர்ச்சி மிக சிறந்த முறையில் இருக்க போவதால் நேர் செய்யப்பட்டு நற்பலன்களை தொடர்ந்து அறுவடை செய்தவாறே இருப்பீர்கள்.

குருவின் 5ம் பார்வை 2ம் வீட்டிற்கு கிடைப்பதால் குடும்ப வாழ்க்கை சிறக்கும்.வருமானத்திற்கு குறைவில்லை.உங்களால் குடும்ப உறுப்பினர்கள் நன்மைகளை பெறுவார்கள்.

குருவின் 7ம் பார்வை நான்காம் வீட்டிற்கு கிடைப்பதால் வீடு,வாகன யோகம் உண்டு.அதேபோல் தாய் வழி நன்மைகள் கிடைக்கும்.

இறுதியாக குருவின் 9ம் பார்வை 6ம் வீட்டிற்க்கு கிடைப்பதால் கடன் தொகை அதிகரிக்கும். ஆயினும் ஒருபுறம் வருமானமும் வந்த படி இருக்கும்.உடல் நலத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும்.

மொத்தத்தில் இரண்டு கிரகங்களின் பெயர்ச்சியும் மீன ராசிக்கு நன்மை தரும் வகையில் தான் உள்ளது.

பரிஹாரம்:

வியாழன் தோறும் குரு பகவானுக்கு எலுமிச்சை நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.சில சஞ்சலங்கள் குறையும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 முடிவுக்கு வந்துள்ளது. அனைவருக்கும் நல்ல பலன்கள் கிடைக்க வேண்டும் என்று நாம் நினைத்தாலும் சில ராசிகளுக்கு மட்டும் தான் குறிப்பிட்ட காலத்தில் நன்மைகள் கிடைக்கும்.

ஆயினும் குரு ஜோதிடத்தில் முழு முதற் சுப கிரகம். பிரம்பால் அடிக்க வேண்டிய இடத்தில் பிளாஸ்டிக் அளவுகோலால் அடிப்பார்.எனவே அது வலிக்காது.இருப்பினும் பரிகார ராசியினர் தங்கள் வசதிக்கு ஏற்ப பரிகாரம் செய்து கொள்ளலாம்.

குரு பெயர்ச்சி 2019 பரிகார ராசிகள்:


ரிஷபம், தனுசு, மகரம், துலாம், கடகம்.

முதன்மை நற்பலன்கள் பெறும் ராசிகள்:


மேஷம், சிம்மம், விருச்சிகம், மிதுனம்.

பிற ராசிகளுக்கும் நற்பலன்கள் உண்டு. அவர்களும் நல்ல பலன் பெறுவார்கள்.

By
Ashwin Kumar

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - கும்ப ராசி

கும்பம் ராசி குரு பெயர்ச்சி 2019:


கும்பம் ராசிக்கு சனி பகவான் ஏற்கனவே11ம் வீடான தனுசுவில் இருப்பதால் நன்மைகள் நடைபெற்றிருக்க வேண்டும்.ஆனால் நடக்கவில்லை என்பது அவர்களின் எண்ணம்.

இனி குரு வருகிறார் அதே 11ம் வீட்டிற்கு.என்ன செய்வார்? 11ம் பாவம் என்பது மிக சிறந்த பாவம். அது லாப ஸ்தானமாக உள்ளது. அங்கேயே உங்கள் ராசியின் லாப ஸ்தானாதிபதி குரு ஆட்சி பெற போவது நிச்சயம் லாபத்தை கொடுக்கும்.

குருவின் 5ம் பார்வை 3ம் பாவத்தில் விழுவதால் முயற்சிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கி அதில் முன்னேற்றம் உண்டாகும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்க பெறும்.

அடுத்து குருவின் நேரடி பார்வை 5ம் வீட்டில் படுவதால் குடும்ப வழி உறவுகள் மூலம் நன்மைகள், குழந்தைகளுக்கு நன்மைகள் போன்றவைகளை எதிர்பார்க்க முடியும்.

குருவின் 9ம் பார்வை 7ம் வீட்டில் விழுவதால் இனி திருமணம் குறித்த நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம்.வாழ்க்கை துணைக்கு நன்மைகள் உண்டாகும். அதேபோல் நட்பு வட்டம் பலம் பெறும்.

குரு பெயர்ச்சி சாதகமாக உள்ளமையால் ஒரு ஆண்டு காலம் நன்றாகவே அமையும்.
ஆயினும் அடுத்து சனி பகவான் 7.5 பிடியில் உங்களை கட்டுக்குள் கொண்டு வருவார் என்பதால் கவனமாக இருத்தல் அவசியம். இருப்பினும் சுய ஜாதகம் நன்றாக இருக்கும் போது எது குறித்தும் அதிகம் அலட்டி கொள்ள தேவை இல்லை.

பரிஹாரம்:

குல தெய்வ வழிபாடு மற்றும் சிவ பெருமான் வழிபாடு உங்களுக்கு நிச்சயம் சிக்கல்களில் இருந்து வெளியே வர கை கொடுக்கும்.

By
Ashwin Kumar

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - மகர ராசி

மகரம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2019:

குரு பெயர்ச்சி இந்த முறை மகர ராசிக்கு 12ம் ராசியான தனுசுவில் நிகழ்கிறது.

அதாவது விரய ஸ்தானமான 12ம் பாவத்திற்கு வருகிறார் என்று அர்த்தம்.12 என்றாலே மறைவு ஸ்தானம்.அது துர்ஸ்தானம் என்று நமக்கு பழக்க படுத்த பட்டுள்ளது.

ஆனாலும் அது 3ம் பாவத்தை விட மோசமான பாவம் இல்லை என்பது நம் அறிவுக்கு எட்டிய உண்மை.

குருவின் பெயர்ச்சியை விட சனியின் பெயர்ச்சிக்கே நீங்கள் அதிகம் எதிர்நோக்கி உள்ளீர்கள் என்பது புரிகிறது. இருப்பினும் குரு என்ன செய்வார் என்று ஒரு கணம் பார்த்து விடுவோமே.

குருவின் 5ம் பார்வை 4ம் வீட்டில் படுவதால் வாகன வீடு போன்ற விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். அதை செய்து காட்டவும் முயற்சி செய்வீர்கள்.அதற்காக கடனை வாங்கியவது செய்ய வேண்டும் என்ற ஆசையை சனி பகவான் கன கச்சிதமாக தூண்டி விடுவார்.

அடுத்து குருவின் 7ம் பார்வை 6ம் வீட்டில் படுவதால் கேட்டவுடன் கடன் கிடைக்கும்.கடன் தொகை அதிகரிக்கும்.அதேபோல் வேலை தேடுபவர்களுக்கு சிறிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டு வேலை கிடைக்கும்.

குருவின் 9ம் பார்வை 8ல் படுவதால் ஆயுள் தொடர்பான பயங்கள் நீங்கும்.மறைமுக செயல்பாடுகள் எதிரிகள் ஆகியவற்றை எதிர்கொள்ள நேரிடும்.

ஒட்டுமொத்தமாக குறிப்பிட வேண்டுமெனில் குரு உங்கள் ஆசையை தூண்டி விடுவார்.சனி அதை நிறைவேற்றி கொடுப்பார்.அதன் பிறகு சனியின் ஆட்டம் ஆரம்பிக்கும்.அடுத்த பெயர்ச்சியில் ஜென்ம சனியோடு ஜென்ம குருவும் ஏற்பட்டு பெரும் மன உளைச்சல் வர வாய்ப்புள்ளது. அதுவும் உங்கள் ராசியில் நீசம் பெறுவார் குரு.

எனவே ஆசைகளுக்கு கடிவாளம் போட்டு இருப்பை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டு கொள்ள படுகிறார்கள்.என்றாலும் சுய ஜாதகத்தில் வலுவான தசா புத்தி அமைப்பு இருக்கும் பட்சத்தில் நல்ல விதமாக தடைகளை கடக்க முடியும்.

பரிஹாரம்:

பெருமாள் வழிபாடு.அஷ்டமி திதியில் பைரவர் வழிபாடு. வியாழன் தோறும் தக்ஷிணா மூர்த்தி வழிபாடு. இவை அனைத்தும் சிக்கல்களை சமாளிக்கும் ஆற்றலை வழங்கும்.

By
Ashwin Kumar

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - தனுசு ராசி

தனுசு ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2019:

ஏற்கனவே ஜென்ம சனி. இப்பொழுது ஜென்ம குரு வேறா??இவர் என்ன தன் பங்கிற்கு செய்ய போகிறார்?

தனுசு ராசி அன்பர்களின் மன நிலை இப்படி தான் உள்ளது.
ஆனால் அவரே ராசி நாதன் ஆகிற்றே. அவரே அனைத்து பாப கிரகங்களின் சாப எண்ணங்களை மாற்றி சுப பலனை அருள் புரியும் முழு முதற் சுபர் ஆயிற்றே?அவரே உங்கள் வீட்டை ஆட்சிக்கு மிஞ்சிய மூலத்திரிகோண வீடாய் கொண்டவர் ஆயிற்றே?இத்தனை நல்ல விஷயங்கள் இருப்பதால் ஜென்ம குரு கடும் கெடுபலன்கள் தர மாட்டார்.

ஏற்கனவே ராசியில் சனி கேது இணைவு உள்ளது. அங்கேயே குருவும் வரும் போது இரு பாப கிரகங்களுக்கும் தன்னுடைய சுப வலிமையை கொடுப்பார்.அதே சமயம் ஆட்சி வீடாக இருப்பினும் இரு பாபியர்களுடன் அவர் சற்று தன் சொந்த வலிமையை இழக்கவே செய்வார்.

இருப்பினும் சனி பகவான் அவரது மகர ராசிக்கு இடம் பெயர்ந்த பின்பு குரு பகவான் கேதுவுடன் மட்டும் இணைந்து கேளா யோகத்தில் அருள் புரிவார்.

தனுசு ராசி அன்பர்கள் இயற்கையிலேயே பெரும்பாலும் பக்திமான்கள். உங்களை முன்னுதாரணமாக கொண்டே பலருக்கும் ஆன்மீகம் பற்றிய புரிதல் வருகிறது.ராசியிலேயே ராசிநாதன் குரு பகவான் ஆட்சி பெறுவதால் அங்கேயே கேதுவும் இருப்பதால் ஆன்மீக சிந்தனைகள் அதிகரிக்கும்.

குருவின் பார்வை 5ம் வீட்டில் படுவதால் குழந்தைகள் விஷயத்தில் கவனம் செலுத்த தொடங்குவீர்கள்.காதல் போன்ற விஷயங்களில் இளைஞர்களுக்கு ஈடுபாடு அதிகரிக்கும்.இருப்பினும் 7.5 சனியின் இறுதி கட்டத்தில் சனி தன்னாலான வில்லங்கத்தை செய்வார் என்பதால் எதற்கும் தயாரான மன நிலையோடு இருத்தல் வேண்டும்.

குருவின் 9ம் பார்வை 9ம் வீட்டில் படுவதால் உங்களால் இயன்ற ஆன்மீகம் தொடர்பான உதவிகளை பிறருக்கு செய்வீர்கள்.

குருவின் 7ம் பார்வை 7ம் வீட்டில் படுவதால் வாழ்க்கை துணையோடு இருந்து வரும் பிணக்குகள் இனி சற்று குறைந்தவாறு இருக்கும்.அதேபோல் பிரிந்த நண்பர்கள் உடன் சேரும் வாய்ப்பும் உண்டாகும்.

குரு ராசியில் அமரும் போது உடல் எடையை அதிகரித்து செல்வார் என்பதால் உடல் பயிற்சி அல்லது உங்களால் இயன்ற வழிமுறைகளை கையாண்டு நல்ல உடற் கட்டோடு இருக்க முயற்சி செய்ய வேண்டும். இருப்பினும் சுய ஜாதகத்தில் அதற்கு எதிரான அமைப்புகள் இருப்பின் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புகள் குறைவு.

ஜென்ம சனியை விட ஜென்ம குருவின் எதிர்மறை பலன்கள் என்பது என்றென்றும் குறைவானது.அவரே உங்களின் ராசிநாதன் என்பதால் அதிக அளவில் கெடுதல்களை செய்ய மாட்டார்.

இருப்பினும் 7.5 சனியின் மூன்றாம் சுற்று முடிவு பெற இன்னும் சில ஆண்டுகள் உள்ளதால் நீங்கள் கடன் வாங்குதல்,ஜாமீன் கையெழுத்து போடுதல்,பெரிய அளவில் முதலீடு போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இருப்பினும் சுய ஜாதகம் மிக வலுவாக இருக்கும் பட்சத்தில் உங்கள் கைகளை சுட்டுக் கொள்ளாத அளவு நீங்கள் முயற்சிக்கலாம்.மற்றோர் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.

பரிகாரம்:


குரு ஸ்தலங்களில் குரு பெயர்ச்சி அன்று வழிபாடு செய்ய வேண்டும்.
வியாழன் தோறும் இனிப்பு,வெள்ளை கொண்டைக்கடலையை கோவில்களில் படையல் இட்டு உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

மனதில் குழப்பங்கள் குறைய வழிபாடு ,தியானம்,யோகா போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
முருக பெருமான் வழிபாடு மன தைரியத்தை கொடுக்கும்.அதுவே சிக்கல்களை தைரியமாக எதிர்கொள்ளும் மன திடத்தை கொடுக்கும்.

By
Ashwin Kumar

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - விருச்சிக ராசி

விருச்சிகம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2019:

7 ஆண்டு காலம்.பட்ட துன்பங்கள் எத்தனை?துயரங்கள் எத்தனை? அடிகள் எத்தனை ?வலிகள் எத்தனை?வாழ்க்கை முடிந்ததா?எதற்கடா பிறந்தேன்? இந்த கேள்விகள் எல்லாம் ஒருவருக்கு ஒட்டு மொத்தமாக எழுந்தால் நிச்சயமாக நீங்கள் விருச்சிக ராசியாக இருக்க வேண்டும்.

பட்ட துன்பங்கள் ஒன்றா இரண்டா?அதைச் சொல்லவும் ஓர் நாள் போதுமா? என சோக கீதம் பாடிய நாட்கள் இனி தொடருமா? இல்லை விடியுமா? குரு பெயர்ச்சி 2019 உங்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்த்து விடுவோமா?

ஜென்ம குரு விலகி இரண்டாம் வீடாகிய தனுசுவில் குரு பகவான் ஆட்சி பெற போகிறார்.இரண்டாம் வீடு தனம்,குடும்பம், வாக்கு ஸ்தானத்தை கூறும் பாவம்.அங்கே தனகாரகன் குரு ஆட்சி பெறுவது மிக சிறந்த அமைப்பு.இனி வருமானம்,குடும்ப நிம்மதி என அனைத்தும் மீட்டு எடுப்பீர்கள்.வார்த்தைகளில் முதிர்ச்சி ஏற்பட்டிருக்கும்.(7.5 சனி முடிந்தால் அப்படி இருப்பது இயல்பு தான்)

குருவின் 5ம் பார்வை 6ம் வீட்டில் விழுவதால் இனி நோய்கள் தாக்கம் குறையும். வேலை இல்லாமல் கஷ்ட பட்டு வந்த விருச்சிக அன்பர்களுக்கு இனி வேலை கிட்டும் காலம் வந்து விட்டது என்றே சொல்லலாம்.அதேபோல் இனி வாங்கிய கடன்கள் படிப்படியாக அடைத்து இழந்த கௌரவத்தை மீட்டு எடுப்பீர்கள்.

அடுத்து குருவின் 7ம் பார்வை 8ம் வீட்டில் விழுவதால் இனி ஆயுள் குறித்த அச்சம் விலகி நன்மைகள் உண்டாகும். அதேபோல் உழைக்காமல் ஈட்டும் மறைமுக வருமானத்தை குறிக்கும் பாவகம் என்பதால் ஏதோ ஒரு வகையில் எதிர்பாராத வருமானம் என்பது கிடைக்க பெறும்.

இறுதியாக குருவின் 9ம் பார்வை 10ம் வீடாகிய தொழில் ஸ்தானத்தில் விழுவதால் இனி முதலீடுகள், புதிய தொழில்கள் ஆகிவற்றை தைரியமாக தொடங்கலாம்.வியாபாரத்தில் ஏற்கனவே உள்ள விருச்சிக ராசிக்காரர்களுக்கு இனி சரிவு நிலை மாறி மீண்டு எழும் காலம் வந்து விட்டது. எனவே இனி வரும் காலங்களில் முயற்சி என்பது திருவினையாக்கும்.

எல்லாம் சரியாக இருக்கிறது என்றாலும் சுய ஜாதகத்தில் பிரச்சனை உள்ளதா என்பதை ஆய்வு செய்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.

பரிகாரம்:

செந்தூர் வேலணை வணங்கி இனி எல்லாம் சுபம் அடைய வேண்டி வரவும்.செவ்வாய் குரு இருவரின் தொடர்பையும் பெற்ற திருச்செந்தூர் முருக பெருமான் இனி வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்துவார்.

By
Ashwin Kumar

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - துலாம் ராசி

துலாம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2019 :

துலாம் ராசிக்கு தற்போதைய கோச்சார நிலைகளே நல்ல பலனை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் ஏனோ குருவிற்கு உங்கள் ராசி ஆகவே ஆகாது.சனி தான் முழு ராஜ யோகாதிபதி என்றாலும் அவர் என்றைக்குமே நிறுத்தி நிதானமாக பலன்கள் கொடுப்பவர்.ஆனால் அவர் கொடுக்கும் பலன்கள் ஆயுளுக்கும் நன்மை அளிக்கும் வகையில் இருக்கும்.சரி குரு பெயர்ச்சி உங்களுக்கு எப்படி என்று பார்க்கலாம்.

குரு 2ம் வீடான விருச்சிகத்தில் இருந்து மூன்றாம் வீடாகிய தனுசுவிற்கு செல்கிறார்.மூன்றாம் வீடு என்பது முயற்சி ஸ்தானம்.சகோதர ஸ்தானம்.முயற்சியை தான் சொல்கிறதே தவிர அதில் வெற்றி கிட்டுமா என்பதை சொல்லாது.

இது கொஞ்சம் சவால் மிகுந்த கால கட்டம்.ஏனெனில் குரு 3ல் நன்மைகள் செய்வார் என்று சொல்வதற்கு இல்லை.ஆனால் பழைய 2ம் பாவத்தில் செய்ய வேண்டிய பாக்கியே இன்னும் இருப்பதால் பெரும் சிக்கலும் இல்லை.உப செய ஸ்தானங்களில் பாப கிரகங்கள் மட்டுமே சிறப்பாக செயல்படும்.

குருவின் 5ம் பார்வை களத்திர ஸ்தானமாகிய 7ல் விழுவதால் திருமண யோகம் உண்டாகும். வாழ்க்கை துணைக்கு நன்மைகள் கிடைக்கும். இல்வாழ்க்கை இனிக்கும்.

குருவின் 7ம் பார்வை 9ம் பாவத்தில் விழுவதால் சில ஆன்மீக ரீதியான பயணங்கள் வழிபாடுகள் ஆகியவற்றை எதிர்பார்க்கலாம்.

குருவின் 9ம் பார்வை 11ல் விழுவதால் வருமானம் கிடைக்கும்.உயர்வும் உண்டாகும்.ஆனாலும் குரு உங்கள் ராசிக்கு அள்ளி கொடுப்பவர் இல்லை கிள்ளி கொடுப்பவர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதிர்ஷ்டம் கை கொடுக்காது முயற்சிகள் தான் கை கொடுக்கும்.

ஆயினும் சனி உச்சம் பெறும் ராசியில் பிறந்த உங்களுக்கு உழைப்பு என்பது கை வந்த கலை.

குரு கொடுக்கா விட்டாலும் சனி பகவான் நிச்சயம் நன்மைகள் செய்வார்.அர்த்தாஷ்டம சனியாகவே இருந்தாலும் அவர் வழியில் கொடுக்க வேண்டிய நன்மைகளை கொடுக்கவே செய்வார்.ஏனெனில் அவர் உச்சம் பெறுவது உங்கள் ராசியில்.பெயர்ச்சி ஆகி சொந்த வீடான மகரத்திற்கு செல்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் சவால்களுக்கு தயாராகுங்கள்.வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள்.வெற்றியை நோக்கி செல்லுங்கள்.

பரிகாரம்:


தொடர்ந்து சிவ வழிபாடு செய்வது நல்லது. அதேபோல் திருவரங்கம் சென்று வருடம் ஒரு முறை வழிபாடு செய்து கொள்ள வேண்டும். நன்மைகள் கிட்டும்.

By
Ashwin Kumar

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - கடக ராசி

கன்னி ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2019:

கன்னிக்கு தற்போதைய கோச்சார நிலையில் கிரகங்கள் சாதகமாக இல்லை என்பதால் சற்று சுணக்கமாக இருக்கிறீர்கள்.

குறிப்பாக ராசியை சனி தனது 10ம் பார்வையால் பார்த்து அர்த்தாஷ்டம சனியாக இருந்து அனைத்து வகையான தடைகளையும் ஏற்படுத்தி வருகிறார்.நீங்கள் நீங்களாகவே இல்லை. அல்லது நீங்களாக இருக்க முடியவில்லை.ஒரு துஷ்ட சக்தி உங்களை ஆட்கொண்டது போன்ற ஒரு உணர்வு.இனி வரும் குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

குரு ஆட்சி வீடான 4ம் வீடாகிய தனுசுவிற்கு செல்வதால் சற்று பரவாயில்லை என்று கூறும் அளவுக்கு நற்பலன்கள் உண்டாகும்.சனி அந்த ராசியை விட்டு விலகி மகரம் செல்லும் வரை முழு பலன்கள் கிடைப்பது சற்று கடினம்.ஆயினும் அது சில காலமே ஆகும்.

குருவின் 5ம் பார்வை 8ம் வீட்டில் படுவதால் இது நாள் வரையில் இருந்த நோய் குறித்த அச்சம் விலகும்.தூர தேச பயணங்கள் அதிகரிக்கும்.அதன் மூலம் பொருள் ஈட்டும் சூழ்நிலை உருவாகும். எதிர்பாரா விதத்தில் பணம் கிடைக்கும்.

குருவின் 7ம் பார்வை தொழில் ஸ்தானமாகிய 10ல் படுவதால் தொழில் முன்னேற்றம், தொழில் துவங்க, முதலீடுகள் செய்ய இது உகந்த நேரம். ஆயினும் அங்கே ராகுவும் உள்ளார் என்பதால் வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டும். கோபம் குறைக்க வேண்டும்.

குருவின் 9ம் பார்வை பக்கத்து வீட்டு சிம்மத்தில் விழுவதால் அது விரய ஸ்தானமாகி 12ம் பாவத்திற்கு உரிய கடல் கடந்து சென்று பொருள் ஈட்டும் வாய்ப்பு,கோவில்,திருமணம், வீடு கட்டுதல் போன்ற செலவுகளையும் எதிர் பார்க்கலாம்.

முந்தைய மூன்றாம் இடத்திற்கு இது எவ்வளவோ மேல் என்று சொல்லும் அளவுக்கு குரு பெயர்ச்சி நன்றாகவே இருக்கும்.இருப்பினும் சுய ஜாதகம் நன்றாக இருக்கும் போது மேலும் நற்பலன்கள் கிடைக்கும்.

பரிகாரம்:


ஆலங்குடி,தென்குடி திட்டை,குருவித்துறை என ஏதேனும் ஒரு குரு ஸ்தலங்களில் குரு பெயர்ச்சி அன்று சக்திக்கு ஏற்ப வழிபாடு செய்து கொள்ளுங்கள்.இனி நடப்பவை எல்லாம் நன்றாகவே நடக்கும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - சிம்ம ராசி

சிம்மம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2019:

சில ஆண்டு காலமாக சுணக்கமாக இருந்த சிம்ம ராசி அன்பர்களுக்கு இனி சிம்மாசனம் கிடைக்க கூடிய காலம் வருகிறது.

அதை சரியாக பயன்படுத்தி கொள்வது அவரவர் கடமை.குரு புத்திர மற்றும் திரிகோண ஸ்தானமாகிய 5ல் ஆட்சி பெற்று ராசியை பார்ப்பது விசேஷம்.
குருவின் 5ம் பார்வை 9ம் வீட்டில் படுவதால் சகல விதமான பாக்கியங்களும் கை கூடி வரும். தந்தைக்கு மேன்மை உண்டாகும்.ஆன்மீக சிந்தனைகள் அதிகரிக்கும்.திருமணம் கை கூடி வரும்.

குருவின் 7ம் பார்வை லாப ஸ்தானத்தில் விழுவதால் தொழில் துறை சார்ந்த சிம்ம ராசி அன்பர்களுக்கு பெரிய அளவில் வெற்றிகள் கிடைக்கும்.அதே போல் மூத்த சகோதர வகையில் நன்மைகள் உண்டாகும். அங்கேயே ராகுவும் சஞ்சரிப்பதால் பலன்கள் இரு மடங்கு அதிகமாக கிடைக்கும்.

இறுதியாக குருவின் 9ம் பார்வை ராசியின் மேல் விழுவதால் அபாரமான வகையில் புதிய லாபங்கள் கிடைக்க பெறும்.ஆரோக்கியம் மேம்படும். நம்பிக்கை அதிகரிக்கும்.

பலன்கள் எல்லாம் சாதகமாகவே இருந்தாலும் அதை அறுவடை செய்ய சுய ஜாதகமும் உதவ வேண்டும். அதேபோல் அவரவர் அதிர்ஷ்ட காற்றோடு உழைப்பின் வியர்வையையும் கொட்டும் பட்சத்தில் அனைத்துமே நல்ல முறையில் நடக்கும்.

பரிகாரம்:


குரு பெயர்ச்சி அன்று குரு ஸ்தலங்களில் வழிபட்டு வர சீரிய முறையில் பலன்கள் உண்டாகும்.சிவன் வழிபாடும் நன்மைகள் பயக்கும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - கடக ராசி


கடகம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2019:


கடக ராசிக்கு இத்தனை நாட்களாக ராசியை பூர்வ புண்ணிய ஸ்தானமாகிய 5ம் பாவத்தில் இருந்து பார்த்த குரு பகவான் இனி ருண ரோக சத்ரு ஸ்தானமாகிய 6ம் பாவத்தில் ஆட்சி வலுவிற்கு செல்கிறார்.

ஆறாம் பாவத்தில் சுப கிரகம் மறைவது அதுவும் உங்கள் ராசியின் பாக்கியதிபதி குரு மறைவது பின்னடைவு என்பதை மறுப்பதற்கில்லை.ஏனெனில் அடுத்து சனி பகவான் தனது சொந்த வீடாகிய மகரத்தில் இருந்து உங்கள் ராசியை தனது 7ம் பார்வையில் பார்த்து குழப்பம் ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆனாலும் இறுதியில் சுய ஜாதகத்தில் உள்ள அமைப்புகளே ஒருவரின் வாழ்க்கையில் முக்கிய பங்காற்றும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

6ல் ஆட்சி பெற்ற குருவின் 5ம் பார்வை 10ல் படுவதால் தொழில் தொடர்பான விஷயங்களில் சில நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

குருவின் 7ம் பார்வை 12ம் வீடான மிதுனத்தில் விழுவதால் சுப செலவுகள் அதிகரிக்கும். எனவே பணத்தை அளவோடு செலவு செய்வது நல்லது.அதே சமயம் தூர தேசம் கடந்த பயணங்கள் செல்ல வாய்ப்புகள் உள்ளன.

இறுதியாக குருவின் 9ம் பார்வை 2ல் விழுவதால் நிச்சயம் வருமானத்திற்கு சில வழிகள் பிறக்கும்.குடும்பத்திலும் அமைதி நிலவும்.

இந்த குரு பெயர்ச்சியில் கடக ராசி அன்பர்கள் நிதானமாக திட்டமிடலுடன் செயல்பட வேண்டியது அவசியம். ஏனெனில் இதுநாள் வரையில் சுப கிரகமான குருவின் பார்வையில் இருந்த ராசி இனி உங்கள் ராசிநாதரை ஜென்ம விரோதியாக கருதும் சனி பகவானின் பார்வையில் இருக்கும் என்பதால் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இருப்பினும் முறையான திட்டமிடல் இருக்கும் பட்சத்தில் எத்தகைய சிக்கலையும் தாண்டும் ஆற்றல் உங்களுக்கு உள்ளது. அமைதியும் மன உறுதியும் உள்ள கடக ராசிக்காரர்கள் சவாலை எதிர் கொண்டு வெற்றி பெறுவார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது.

பரிகாரம்:


பௌர்ணமி அமாவாசை நாட்களில் கிரிவலம் செல்வதும் வியாழன் தோறும் குரு பகவானுக்கு எலுமிச்சை நெய் விளக்கு தீபம் ஏற்றி வழிபடுவதும் நல்ல பலன்களை கொடுக்கும்.மன குழப்பம் ஏற்படாமல் இருக்க தியானம் போன்ற பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.

By
Ashwin Kumar

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - மிதுன ராசி

மிதுனம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2019:


மிதுன ராசிக்காரர்கள் ஏற்கெனவே இந்த ராகு கேது சனி ஆகிய மூன்று பாப கிரகங்களின் தாக்கத்தால் சோர்ந்து போய் உள்ளார்கள். இப்பொழுது குரு வந்து என்ன செய்ய போகிறார் என்று யோசிக்க கூடும்.

மற்றொரு பக்கம் அஷ்டம சனி வேறு வெயிட்டிங் லிஸ்டில் வில்லங்கம் செய்ய காத்து கொண்டு இருப்பதாக பல்வேறு முனைகளில் இருந்து எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டு கொண்டே இருப்பதால் ஒரு வித குழப்பம். சரி இந்த குரு பெயர்ச்சியால் ஏதாச்சும் நன்மை உண்டா??அதையும் தான் பார்ப்போமே...

குரு பகவான் தனது சொந்த வீடாகிய தனுசுவில் இருந்து உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் சஞ்சாரம் செய்வார்.இது அஷ்டம சனியின் கஷ்ட காலங்களில் இருந்து சற்று நிம்மதி பெருமூச்சு விட ஒரு ஆண்டு காலத்திற்கு உதவிகரமாக இருக்கும்.

குருவின் 5ம் பார்வை லாப ஸ்தானமாகிய 11ம் வீட்டில் இருப்பதால் ஓரளவு நன்மைகள் உண்டாகும். ஏன் ஓரளவு என்று கூறி உள்ளேன் என்ற கேள்விக்கான பதில் சனி பெயர்ச்சி பலன்கள் கட்டுரையில் கிடைக்கும். மூத்த சகோதர வகையில் நன்மைகள் எதிர்பார்க்கலாம்.

அடுத்து குரு பகவான் நேரடியாக ராசியை 7ம் பார்வையாக பார்ப்பதால் இந்த ராகு கேது தரும் தொல்லைகள் சற்று விலகி மன தைரியத்துடன் கூடிய நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.குழப்பங்கள் குறையும்.
இறுதியாக குருவின் 9ம் பார்வை 3ம் வீட்டில் படுவதால் உங்களுக்கு முயற்சிகள் என்பது அதிகமாகவே இருக்கும். அதே சமயம் மனதில் சவாலை சமாளிக்கும் இனம் புரியாத தைரியம் பிறக்கும்.இளைய சகோதர வகையில் நற்பலன்கள் உண்டாகும்.

ஆயினும் அதன் பிறகு தான் கதையே ஆரம்பமாகும்.சனியின் ஆதிக்கம் அதிகரிக்கும்.அதிலும் அடுத்த 2020 குரு பெயர்ச்சி என்பது அஷ்டம குருவாகி அவரே ஆட்சி பெற்ற சனியின் வீட்டில் நீசம் பெற்று கடுமையாக என்று தாராளமாக சொல்ல கூடிய அளவுக்கு பலன்கள் இருக்கும்.இதை ஏன் சொல்கிறோம் என்றால் 8ல் சுப கிரகம் நீசம் பெற்று அங்கேயே துர்ஸ்தானத்தின் அதிபதியும் இயற்கை பாப கிரகமும் ஆகிய சனி ஆட்சி வலுவில் அஷ்டம சனி நடக்க இருப்பதால் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

இது பயமுறுத்த அல்ல.நீங்கள் புதிய முயற்சி,கடன் பெறுதல்,ஜாமீன் கையெழுத்து போடுதல் போன்ற விஷயங்களில் விலகியே இருக்க வேண்டும். சுய ஜாதக வலு இருந்தால் ஓரளவு பாதகம் இல்லாமல் தப்பித்து கொள்ள முடியும்.ஆயினும் நிதானமே பிரதானம் என்பதை ஓர் ஆண்டு கழித்து தாரக மந்திரமாய் கொள்ளவும்.

இருப்பினும் புத்திசாலி கிரகமான புதனின் ராசியில் பிறந்த நீங்கள் தங்கள் அறிவாற்றல் மூலம் சிக்கலை திறம்பட சமாளித்து வருவீர்கள்.அவர் மாத கணக்கில் சுக்கிரனோடு அடிக்கடி வீட்டில் வந்து தங்கி சிக்கல்களுக்கு சில மருந்துகள் கொடுக்கவே செய்வார்.

பரிகாரம்:


தொடர்ந்து சிவனை நோக்கி வழிபடவும்.சனி கிழமைகளில் பெருமாள் வழிபாடு செய்து கொள்ள வேண்டும். மற்ற பரிகாரங்கள் சனி பெயர்ச்சியில்.

By
Ashwin Kumar

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - ரிஷப ராசி


ரிஷபம் ராசி : குரு பெயர்ச்சி 2019


ரிஷப ராசிக்கு இதுவரை 7ல் இருந்த குரு இனி 8ம் வீடான தனுசுவிற்கு செல்வதால் உண்டாகும் பலன்களை பார்ப்போம்.

அஷ்டம குரு நஷ்டத்தை கொடுப்பாரா என்ற ஐயம் அட்டம சனியால் படாத பாடு பட்டு வரும் ரிஷப ராசி அன்பர்களுக்கு இருப்பது புரிகிறது. முதலில் 8ம் பாவம் என்பது துர்ஸ்தானம் என்று மட்டுமே நமக்கு ஒரு பிம்பத்தை கட்டமைத்துள்ளார்கள்.ஒருவரின் வாழ்நாளை சொல்லும் பாவகத்தை ஒருவரின் மரணத்தை சொல்லும் பாவம் என எதிர்மாறாக கூறி மக்களை பயமுறுத்தி வைத்துள்ளார்கள்.

காலம் எப்படி உள்ளது பாருங்கள்..ரிஷபத்தின் ராஜ யோகாதிபதி என விதிக்கப்பட்ட சனி படுத்தி எடுக்கிறார்.ரிஷப நாதன் சுக்கிரனின் முதன்மை எதிரியாக கருதப்படும் குரு பகவான் நன்மை செய்வாரா என்கிற எதிர்பார்ப்பு ஏற்படுகிறது.

முன்பே கூறியது போல் சுய ஜாதகத்தில் நல்ல தசா புத்தியில் உள்ளவர்கள் அதிகம் கவலை கொள்ள தேவையில்லை.அஷ்டமத்து குரு வெளிநாடு ,வெளிமாநிலம் போன்ற தூர தேச பயணங்களுக்கு துணை புரிவார்.கல்வி,பணி தொடர்பாக தூர தேசம் செல்ல காத்திருப்பவர்களுக்கு இனி நல்ல சேதி வரும்.

மறைந்தாலும் ஆட்சி பெற்று அவர் 12ம் வீட்டை பார்ப்பதால் நல்ல உறக்கம்(அஷ்டம சனியில் தொலைத்தீர்களே அதே உறக்கம் தான்),சுப காரியங்களுக்கான செலவுகள் ஏற்படும்.

அடுத்து குருவின் நேரடி பார்வை 2ம் வீட்டில் படுவதால் இனி உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு கிடைக்கும். குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் சற்று குறையும்.குறிப்பிட்ட சில நிலைகளில் வருமானம் கிடைக்கும். அதை சேமித்து கொள்வது நன்மை பயக்கும்.

குருவின் 9ம் பார்வை நான்காம் வீட்டில் படுவதால் வீடு,வாகனம் போன்ற விஷயங்களில் இருந்து வந்த முட்டு கட்டை விலகும்.தாய் வழி நன்மைகள் உண்டாகும்.

அஷ்டம சனியை விட அஷ்டம குரு கொடியது அல்ல என்பது அனுபவ பூர்வ உண்மை.இருப்பினும் நல்ல காலம் முழுமையாக பிறப்பதற்கு நாட்கள் உள்ளன என்பதால் பொருளாதார விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தி உடலை பேண வேண்டும்.

பரிகாரம்:


ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் வழிபாடு செய்வது நிச்சயம் சிக்கல்களில் இருந்து உங்களை விடுவிக்கும்.
பொருளாதாரம் மேம்பட மகாலட்சுமி தேவியை வழிபாடு செய்து கொள்ள வேண்டும்.

By
Ashwin Kumar

குரு பெயர்ச்சி 2019 - மேஷம் ராசி

குரு பெயர்ச்சி 2019:


குரு பகவான் விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு (அதாவது தனது ஆட்சி மூல திரிகோண வீட்டிற்கு) பெயர்ச்சி ஆகி செல்ல உள்ளார்.அது வாக்கியப்படி அக்டோபர் மாதத்தில் 29ம் தேதியிலும் திருக்கணிதப்படி நவம்பர் 5ம் தேதியிலும் பெயர்ச்சி ஆகிறார்கள்.அது குறித்த பலனை பார்ப்போம்.கோச்சார பலனோடு சுய ஜாதகமும் எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

மேஷம் ராசி:


கடந்த ஓர் ஆண்டு காலமாகவே குரு உங்கள் ராசிநாதனின் மற்றொரு வீடான விருச்சிகத்தில் அவர் சஞ்சரித்தாலும் அது உங்கள் ராசிக்கு மறைவு ஸ்தானமான 8ம் வீடு என்பதால் குரு முழு பலனை கொடுத்து விட்டார் என்று சொல்வதற்கு இல்லை.

மேஷத்தின் பாக்கியாதிபதி குரு மறைந்ததும் பாக்கிய ஸ்தானத்தில் சனி சென்று அமர்ந்து கொண்டமையாலும் பல அதிர்ஷ்ட குறைபாடுகள் ஏற்பட்டு இருக்க கூடும்.ஏனென்றால் திரிகோண வீடுகளை சனி,ராகு போன்ற பாபர்கள் வெறுப்பார்கள்.

இனி ஏற்பட போகும் மாற்றம் மிக சிறந்த அமைப்பு ஆகும்.பாக்கியாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சிக்கும் மிஞ்சிய மூல திரிகோணம் அடைந்து லக்கினத்தை பார்க்க போகிறார்.குறிஞ்சி மலர் பூத்தார் போல் தான் இந்த அமைப்பும்.அவ்வளவு சிறப்பான மற்றும் அரிதான அமைப்பு.

குரு லக்கினத்தை பார்ப்பதால் இனி வாழ்வில் நம்பிக்கை பெருகும்.புதிய விஷயங்களை தைரியமாக செய்யலாம் (செவ்வாயின் மேஷ ராசி அன்பர்களுக்கு தனியாக தைரியம் பற்றி பாடம் சொல்லி தர தேவை இல்லை).குரு பார்வை வந்து விட்டதால் திருமணம் போன்ற சுப காரியங்கள் விரைவில் கை கூடி வரும்.

குரு அடுத்து 3ம் வீட்டை பார்ப்பதால் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி கிட்டும்.சகோதர வழி நன்மைகள் உண்டாகும். தைரிய ஸ்தானமும் அதுவே என்பதால் இனி யோசித்த அனைத்து விஷயங்களிலும் முழுமையாக தைரியத்துடன் செயல் பட முடியும்.

அடுத்து குரு பகவான் மற்றொரு திரிகோண ஸ்தானமான 5ம் வீட்டை பார்ப்பதால் குழந்தை வரம் நோக்கி இருப்பவர்களுக்கு புத்திர காரகன் குரு அதை கனிவோடு வழங்குவார்.குழந்தைகள் உள்ள மேஷ ராசியினருக்கு அவர்கள் மூலம் நன்மையும் குழந்தைகளுக்கும் நன்மையும் ஏற்படும்.அது பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பதால் தந்தை வழி உறவுகள் மூலம் நன்மைகளும் பிறக்கும்.

குருவோடு கேதுவும் இருப்பார் என்பதையும் முழு பலன்கள் சனி பெயர்ச்சிக்கு பின்பே முழுமையான நற்பலன்கள் அனுபவிக்க முடியும் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.கேது உடனிருந்து குருவோடு சேர்வது நன்மை தரும் அமைப்பாகும்.

தந்தை, குரு ஸ்தானத்தில் இருப்பவர்களோடு நல்லுறவை பேண வேண்டும்.

தொழில் ,செலவுகள், வாழ்க்கை துணையோடு ,நண்பர்களோடு அனுசரித்து போக வேண்டிய காலகட்டமும் இதுவே என்பதையும் கூறிக்கொள்ள கடமை பட்டுள்ளேன். அது ஏன் என்பதை மற்றோரு தருணத்தில் கூறுகிறேன்.

பரிகாரம்:


குரு செவ்வாய் இருவரும் தொடர்பு பெறும் திருச்செந்தூர் முருகப்பெருமானை தரிசித்து வர தொட்டது துலங்கும்.

By
Ashwin Kumar

© 2015 Tamil Jothidam Tips. WP themonic converted by Bloggertheme9. Powered by Blogger.
TOP